Monday, September 24, 2007

"அபாயத்து பாட்டி"

"அபாயத்து பாட்டி"

அபாயத்து பாட்டியின் பூர்வீகம் எனக்கு தெரியாது. எப்பொழுதும் வெள்ளை சேலை உடுத்திருக்கும் பாட்டியாக மட்டுமே எனக்கு அவரை தெரியும். பாட்டியின் வீடு எங்கள் வீட்டிலிருந்து ஒரு மைல் தூரமிருக்கும். வீடு என்றால் பெரீய வீடல்ல... ... ஒரு சின்ன ரூம் மாத்திரமே. எனக்கு நியாபகம் தெரிந்த நாள் முதல் பாட்டி கலையில் ஏழு மணிக்கெல்லாம் எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவார். சாயங்காலம் ஆறு மணிக்கு திரும்புவார். காலையில் ஐந்து மணிக்கு எந்திரிச்சு, பக்கத்திலுள்ள கோவிலுக்கு போய் பூசை பார்த்துவிட்டுதான் எங்கள் வீட்டிற்கு வருவார். வந்ததும் அம்மா கொடுக்கும் காபி (கருப்புக்கட்டி காபி) குடித்துவிட்டு வீட்டின் பின் முற்றத்தில் காலை நீட்டிக்கொண்டு உட்காருவார். பின் முற்றத்த்தைதான் எல்லோரும் அதிகம் உபயோகிப்பார்கள். யாரும் ஒரு ரோஜாப்பூவை கூட பறிக்க முடியாது. பாட்டி ஒரு வெற்றிலை இடிக்கும் உரலை எடுத்து வைத்துக் கொட்டை பாக்கை உடைத்து அதை தல்லி மென்னுவது ஒரு அழகுதான். அதற்கு பங்கு போடுவதற்கு நானும் போய் உட்கார்ந்துக்குவேன். அம்மாவிற்கும் பாட்டிக்கும் இதனால் எப்பொழுதும் சண்டை வரும். (செல்லமாக).

என் அக்காவெல்லாம் வெளியூரில் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்ததால் அம்மாவும் அப்பாவும் அடிக்கடி, மதுரை, தூத்துக்குடி, ஆலப்புழா என்று போய்விடுவார்கள். அப்போதெல்லாம் பாட்டிதான் உதவுவார். எங்களுக்கு வீட்டில் காவல் அவர்தான். பெட் ஷீட் குடுத்தாலும் வேண்டாமென்று சொல்லிவிட்டு தன் வெள்ளை சேலையை விரித்து படுத்துக் கொள்வார். காலையில் எந்திரிச்சு கோயிலுக்கும் போவார்.

வருடத்தில் இரண்டு முறை வயல் அறுவடை ஆகும். கதிரடித்து முடிவதற்கு எப்படியும் இருபது நாட்களாகும். அப்பவும் பாட்டிதான் களத்தில்(வீட்டிற்கு பின்புதான் களம்) ஒரு நார் கட்டில் போட்டு, தன் சேலையை விரித்து படுத்திருப்பார். "சூடடிக்க" வரும் குட்டி பசங்கள் அவர் காதில் போட்டிருக்கும் பாம்படத்தை தூங்கும் போது வெட்டி எடுத்துக் கொள்வோம் என்று பாட்டியிடம் வம்பு பண்ணுவாங்க. பாட்டியும் சிரித்து விட்டு ராத்திரி தூங்காம விழிச்சு இருப்பாங்க. வீட்டிலுள்ள எல்லா விசேஷங்களுக்கும் பாட்டி நிச்சயம் இருப்பாங்க. வேலை எதுவும் செய்ய இயலாவிட்டாலும் அவர் ஒரு காவல் தெய்வம் மாதிரி. வாய் மட்டும் எப்பொழுதும் வெற்றிலை மென்னுக்கிட்டு இருக்கும்.

அம்மாவிற்கு மாடுகள் என்றால் ஒரு பெரிய passion. பெரிய தொழுவமே உண்டு. புறா கூடுகள், கோழி கூடுகள், love birds... etc.. எல்லாம் உண்டு. பாலை அவர் சொசைட்டிக்குதான் கொடுப்பார். ஆனாலும் சில்லறையாக பால் வாங்க சிலர் வருவார்கள். அப்பொழுதெல்லாம் நாந்தான் பால் ஊற்றிக் கொடுப்பேன். அந்த சில்லரையெல்லாம் எனக்குதான். அதிலிருந்துதான் பாட்டிக்கு நான் பக்கத்து முக்கு கடையில் போய் வெற்றிலை வாங்கிட்டு வருவேன். அதனாலே பாட்டிக்கு என் மேல் ஒரு விருப்பம்.

இந்த மாடுகள் எல்லாம் ரொம்ப உசத்தி மாடுகள். அதனால அப்பா ஒரு சின்ன swimming pool கட்டினார். (மாடுகளை குளிப்பாட்ட). பாட்டி குளி ரூமில் குளிக்காமல் அதில் தான் குளிப்பார். பாட்டிக்கு எப்பவுமே 'உமிக்கரி, கோபால் பல்பொடி' மீது ஒரு வெறுப்பு. வீட்டில அக்காவுங்க எல்லாம்
உபயோகிக்கும் களிம்பு மேல ரொம்ப பிரியம். இப்படித்தான் ஒரு அறுவடை நாளில் பாட்டி குளிக்க போனாங்க. அங்கே இருந்த களிம்பை எடுத்து பல்? தேச்சாங்க. ஒரே நமைச்சல். வாயெல்லாம் வெந்து போய் ஒண்ணுமே பேச முடியாம ... கண்ணெல்லாம் சிகப்பாகி.. யாருக்கும் ஒண்ணுமே புரியல.
பால் கறக்கிற கோனார் பாட்டியை முற்றத்தில் தூக்கிக் கொண்டு வந்து போட்டார். பாட்டியால் ஒண்ணுமே பேச முடியலை. உடனே பக்கத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் அங்கு க்ளுகோஸ் எல்லம் ஏற்றி ஒரு வழியாக பாட்டி சாயாந்தரம் கண்ண முழிச்சு பார்த்தாங்க. பாட்டி கூட நாந்தான் ஆஸ்பத்திரியில். அப்பா ஒரே ஏச்சுதான். வயலறுக்கிர நேரத்தில் கிழவி இப்படி உடம்பு முடியாம ஆஸ்பத்திரியில படுக்க வேண்டியதாச்சேன்னு. அம்மா ம்ட்டும் எங்கிட்ட பாட்டிய பத்திரமா
பார்த்துக்க சொல்லி கையில் நிறைய காசும் கொடுத்துட்டு போனாங்க. எப்படியோ ராத்திரிக்கு வீட்டுக்கு போய்விட்டோம்.

அடுத்த நாள் காலையில் பாட்டி என்னை மிக ரகசிய்மா கூப்பிட்டு அந்த களிம்பை காண்பித்து " ஏன் கண்ணு , நீங்கல்லாம் இத வச்சு பல் தேய்க்கும்போது ஒண்ணுமே ஆகல எனக்கு மட்டும் ஏன் உதடு வீங்கிடுச்சுன்னு கேட்டாங்க. அப்பத்தான் எனக்கு விஷயமே புரிஞ்சுது. பாட்டி உபயோகிச்சது " பெனிசில்லின் ஆயிண்ட்மெண்ட்". கன்று குட்டிய குளிப்பாட்டி விட்டு அதுக புண்ணுல போடுவதற்காக வாங்கி வச்சிருந்த ஆயிண்ட்மெண்டை பாட்டி உபயோகிச்சுருக்காங்க..பாவம். பாட்டி was allergic to penicillin. எப்படியோ பாட்டி பிளைச்சது கடவுளின் செயல்தான்.

எனக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடச்சத பாட்டிக்கிட்ட சொன்னதும் பாட்டிக்கு ரொம்ப சந்தோஷம். ஆனால் அவங்களை விட்டு விட்டு தொலை தூரம் போறேன்னு கவலை. அம்மாகிட்ட ஒரு பத்து ஏழைங்களுக்கு பாயசத்தோடு சாப்பாடு போட சொல்லி ஆளுங்களையும் கோவிலிலிருந்து அழைச்சுக்கிட்டு வந்தாங்க.

வீட்டில கடை குட்டியான நான் மெட்ராஸ் கிளம்பிற அன்றைக்கு பாட்டிக்கு ஒரே சங்கடம். எங்க compound-ல் குடியிருக்கிறவங்க, வீட்டில வேலை செய்கிறவங்க, அப்பா மில்லுல்ல வேலை பார்க்கிறவுங்கன்னு ஏகப்பட்ட கூட்டம். வீட்டில எல்லா பெண்ணுங்களும் வெளியூருக்கு படிக்க
போயாச்சு. நான் தான் கடைசி.... ஜெபமெல்லாம் செஞ்சு முடிச்சப்பறம், நான் கிளம்பிறச்ச, எனக்கோ ஒரே அழுகை.... புதுசா மெட்ராசுக்கு செல்கிறேன். பாட்டி என்ன பிடிச்சு முத்தம் கொடுத்து கையில் எதையோ அழுத்தினார். அது ஒரு சுருக்கு பை.. அதற்குள் கொஞ்சம் காசு...ஒரு வெற்றிலைக்குள் மடிச்சு கொஞ்சம் தல்லுன வெற்றில பாக்கு....

மூணு மாசம் கழிச்சு அம்மாகிட்ட இருந்து ஒரு கடிதம். அதில் பாட்டி இறந்துவிட்டதாக ..மனசு ரொம்ப கவலையா இருந்துச்சு...பாட்டிக்கு எதற்கு "அபாயத்து பாட்டி" ன்னு பெயர் வச்சாங்கன்னு எனக்கு தெரியாது. பெண் பிள்ளைகள் அதிகம் இருந்த எங்கள் வீட்டில் யாருக்கும் ஒரு அபாயமும் வராமா எங்களையெல்லாம் பார்த்துகிட்டதற்க்காகவான்னு இன்னும் எனக்கு பதில் தெரியல.......

21 comments:

நாகை சிவா said...

இது போல வீட்டுக்கு ஒரு பாட்டி இருக்க தான் செய்கிறார்கள்.....


வெறும் பாசத்தை தவிர வேற எதையும் எதிர்பாக்காத அன்பு உள்ளங்கள்...

துளசி கோபால் said...

அடடா............... அபாயத்துப்பாட்டி இப்ப இல்லையா? ஆனாலும் அருமைங்க,பாட்டியும் இந்தப் பதிவும்.

ஒருவெளை பாட்டியோட பேர் அபயம், அபயாம்பாள்ன்னு இருந்திருக்குமோ என்னவோ? இந்தப்பேர் எல்லாம் இப்பப் புழக்கத்தில் இல்லை.

பாட்டிக்குக் 'கோபால்' பல்பொடி பிடிக்கலைன்னதும் எனக்கு ஒரு வருத்தம்(-:

வடுவூர் குமார் said...

கிராமத்து வீடுகளில் இன்னும் இந்த மாதிரி பாட்டிகளை பார்க்கலாம்.
நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

delphine said...

சிவா, குழந்தைகள் பாட்டிகளுடன் வளர்வது மாதிரி பெரிய கொடுப்பனை எதுவுமில்லை

துளசிக்கு எப்பவுமே கிண்டல்தான். பாவம் கோபால் சார். உங்ககிட்ட என்ன திண்டாட்டமோ?:(

முத்துலெட்சுமி said...

ம்... பாட்டி பாவம் ... :(

வெத்தலை வாங்கிக்குடுத்து பாட்டியோட பாசத்தை கட்டிவச்சிக்கிட்டீங்களா நீங்க சமத்து தான்.

delphine said...

Thanks Kumar.
modern days Grandmas have time only to sit in front of the computers..(including me).
h a haa haaa

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அக்கா!
இப்படிப் பாட்டிகள் எங்கள் கிராமங்களிலும் வந்து,ஆபத்துக்கு உதவுவார்கள்...குறிப்பாக வயது வந்த பெண்பிள்ளைகள் வீடுகளில் இவர்களுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும்.
கைவைத்தியம்; பழைய சுவையான சாப்பாட்டுவகைகள் இவர்களிடம் கற்றுக் கொள்ளலாம்.
சிலசமயம் சொந்தப் பிள்ளைகள் உள்ளவர்கள் கூட , வேறு குடும்பத்துடன் தங்குதல் கூட கண்டுள்ளேன்." அவளும் பிள்ளைகளும் என்ன? பாடோ எனப் பரபரப்பாக இருப்பார்கள்..
தங்கள் இந்தப் பாட்டியும் இந்தரகமே!!!

கோபிநாத் said...

அழகான நினைவுகள்...

\\\பெண் பிள்ளைகள் அதிகம் இருந்த எங்கள் வீட்டில் யாருக்கும் ஒரு அபாயமும் வராமா எங்களையெல்லாம் பார்த்துகிட்டதற்க்காகவான்னு\\

இதை தவிற வேற என்ன காரணம் இருக்க முடியும்!...

mangai said...

என்ன டாக்டரம்மா நான் போடற பின்னூடமே காணாம போயிடுது

நேத்து அப்படித்தான் ஆச்சு..சரி நான் தான் சரியா க்ளிக் பண்ணலை போலன்னு நினச்சுட்டேன்.
இன்னைக்கும் அப்ப் ஒரு பின்னூட்டம் போட்டேன் கானோம்...ஹ்ம்ம்

அழகான நெகிழ்வான நினைவு கூறல் டாக்டரம்மா...நல்லா சொல்லி இருக்கீங்க

Anonymous said...

என்ன டாக்டரம்மா நான் போடற பின்னூடமே காணாம போயிடுது

நேத்து அப்படித்தான் ஆச்சு..சரி நான் தான் சரியா க்ளிக் பண்ணலை போலன்னு நினச்சுட்டேன்.
இன்னைக்கும் அப்ப் ஒரு பின்னூட்டம் போட்டேன் கானோம்...ஹ்ம்ம்

அழகான நெகிழ்வான நினைவு கூறல் டாக்டரம்மா...நல்லா சொல்லி இருக்கீங்க

மங்கை

கண்மணி said...

உண்மையைச் சொல்லனும்னா பொம்பளை பிள்ளைகளுக்கு முதல் தோழியே இந்த மாதிரி பாட்டிங்கதான்.எல்லாத்துக்கும் ஆதரவா சப்போர்ட் பண்ணி [லவ் மேட்டரானாலும்]அன்பா இருப்பாங்க
[unabe to post comment.see to it]

வடுவூர் குமார் said...

தலைப்பில் படம் மாற்றிவிட்டீர்கள் போலும்?
அழகாக உள்ளது.

delphine said...

யோகன் நன்றி...என்னவோ என்னால் இந்த பாட்டியை மறக்கவே . She was a part of my life.

delphine said...

ஆமா கோபி.. அழகான அருமையான பசுமையான நினைவுகள். இவைகளை அசைபோடும் போது ஒரு புத்துணர்வே.

மங்கை மாமியோவ்....நன்றி.. வயசாயிடுச்சுல மாமி... க்ளிக் பண்ண மறந்திருப்பீங்க..

டீச்சர்..ஆனா என் லவ் மேட்டர் சொல்றதுக்கு முன்பே பாட்டி இறந்து போய்ட்டாங்க..She was a 'Darling'..

கண்மணி said...

அடப் பாவி டெல்பின்
அப்ப நெசமா லவ் மேட்டர் இருந்ததா?[இதுக்கு பேர்தான் போட்டு வாங்குறது தேங்க்ஸ்டூ பார்த்திபன்]
ஆமா உங்க லவ் மேட்டர் 'மாசி சாருக்கு' தெரியுமா?;)

delphine said...

லவ்வே 'மாசி' தானே! அத பற்றி ஒரு பதிவே போடலாம்..ஆனா உங்களுக்குதான் போரடிச்சுரும். அம்புட்டு விஷயங்கள்..

delphine said...

thank you Kumar...
எல்லாம் டீச்சர்தான் கற்றுகொடுத்தது.(நான் இன்னும் எல்.கே.ஜி தான்)

PAISAPOWER said...

ஆஹா...

நாலஞ்சி நாளா ஊர்ல இல்லை...அந்த கேப்ல பாட்டி கதையெல்லாம் சொல்லீருக்கீங்களா....நைஸ்..

நான் கூட எங்க அம்மாச்சிக்கு ரொம்ப செல்லம்...பயங்கர க்ளோஸ்.

அம்மாச்சி இப்ப இல்லை போய் 21 வருசம் ஆச்சி...ஆனா இன்னும் பசுமையா இருக்காங்க....அவங்க ஆசீர்வாதம்தான் நான் இன்னிக்கு இப்படி இருக்கறதுன்னு அடிக்கடி நன்றியோட நினைச்சிக்குவேன்....

ம்ம்ம்ம்...தாயே!...இப்படி ஃபீல் ஆக வச்சிட்டீங்களே....

மாயாவி...! said...

ஆஹா...

நாலஞ்சி நாளா ஊர்ல இல்லை...அந்த கேப்ல பாட்டி கதையெல்லாம் சொல்லீருக்கீங்களா....நைஸ்..

நான் கூட எங்க அம்மாச்சிக்கு ரொம்ப செல்லம்...பயங்கர க்ளோஸ்.

அம்மாச்சி இப்ப இல்லை போய் 21 வருசம் ஆச்சி...ஆனா இன்னும் பசுமையா இருக்காங்க....அவங்க ஆசீர்வாதம்தான் நான் இன்னிக்கு இப்படி இருக்கறதுன்னு அடிக்கடி நன்றியோட நினைச்சிக்குவேன்....

ம்ம்ம்ம்...தாயே!...இப்படி ஃபீல் ஆக வச்சிட்டீங்களே....

வல்லிசிம்ஹன் said...

டெல்ஃபின் ,அபயம் பாட்டி
மாதிரி இனிமே பார்க்க முடியுமா:((

அவங்களுக்கும் உங்க வீட்டு அருமை தேவையாக இருந்திருக்கு.

நல்ல நேரங்கள்.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றிப்பா.

அபி அப்பா said...

அம்மாடிங்களா இது எச்சரிக்கை! நானும் பின்ன என் காதல் கதை போட்ட வேண்டி இருக்கும்:-))