Wednesday, September 12, 2007

அப்புகுட்டனும் நானும்...

அப்புக்குட்டனை நான் முதலில் சந்தித்த போது எனக்கு பத்து வயது. ஒரு நாள் மாலை ஆறு மணிக்கு கொஞ்சம் நாணத்தோடு 'தையா தை' என்று நடனம் ஆடிக்கொண்டிருந்ததை பார்த்த போது இந்த நாட்டு புரத்திற்கு ஒரு 'தையா தை' தேவைதானா என்று நானும் என் கூட நடனம் பயின்று கொண்டிருந்த சந்திரிகாவும் ஒரே கிண்டல். எங்களிருவருக்கும் பரத நாட்டியத்தை கரைத்துக் குடித்து விட்டதாக எப்பொழுதும் ஒரு மமதை. கிட்ட தட்ட மூன்று வருடங்களாக நடனம் கற்றும் , அந்த பாம்பு நடனமும், மயில் நடனமும் சரியான படி ஆட எங்கள் இருவருக்குமே வராது.

ஒரு நாள் தவறாது மாலை ஆறு மணிக்கு நடன வகுப்புக்கு அப்பு குட்டன் ஆஜர் ஆகி விடுவான். நல்ல கருப்பு நிறம். ஆனாலும் ஒரு அழகு. அதிகம் பேசமாட்டான். எங்கள் வீட்டு பக்கத்திலுள்ள ஒரு மருத்துவ மனையில் கம்பௌண்டராக காலையிலிருந்து மாலை வரை வேலை. அதன் பிறகு பரத நாட்டிய வகுப்பு. அவனை எங்கள் வழிக்கு இழுத்து வர ஆறு மாதம் பிடித்தது. இதற்குள் அவன் நல்ல ப்ராக்டீஸ் எடுத்து எங்களை மிஞ்சும் நிலையில் கற்றுக்கொண்டான். 'நாட்டியமே மூச்சு' என்கிற ஒரு வெறி அவனிடமிருந்தது.

மாதர் சங்க நிகழ்ச்சிக்காக நாங்கள் யாவரும் ஒரு நடனம் ஆடுவதற்காக பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தோம். அவன் நடுவிலும் நானும் சந்திரிகாவும் அவன் பக்கத்திலும் ஆடுவதாக இருந்தோம். கடைசியில் சந்திரிகாவின் அம்மா தன் மகள் ஒரு ஆணோடு ஆடக்கூடாது என்று அடம் பிடித்ததால் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள முடியாது போலாகிவிட்டது...... அப்பு குட்டனுக்கு பயங்கர கவலை. உடனே அவன் தன் அம்மாவை அழைத்துக்கொண்டு வந்து சந்திரிகாவின் தாயை பார்த்து சமாதானம் பண்ணினான். அன்றுதான் நானும் அவன் அம்மாவை முதலில் பார்த்தேன். ஒல்லியான, குட்டையான தேகம். ஒரு மலையாளிக்குரிய உடை, நெற்றியில் ஒரு சின்ன சந்தன பொட்டு... நிதானமான ஆனால் கெஞ்சின பேச்சு..,..

நாங்கள் காந்தி ஜயந்தி அன்று மாதர் சங்கத்தில் ஆடினோம். எங்களுக்கு சன்மானமாக ஒரு ரூபாய் கிடைத்தது. அவன் அதை மிக பய பக்தியோடு அம்மாவிடம் கொடுப்பதை பார்த்து அவனை கிண்டல் பண்ணினோம்... சிரித்தான்.. முதல் முதலாக தன்னை மறந்த சிரிப்பு .. அடைய முடியாத ஒன்றை அடைந்துவிட்டதாக அவ்வளவு ஒரு மகிழ்ச்சி. ......

அதன் பிறகும் ஒரு சில நிகழ்ச்சிகள் சேர்ந்து செய்தோம்..எங்கள் வீட்டிலிருந்தும் சந்திரிகா வீட்டிலிருந்தும் யாரும் வரமாட்டார்கள். எல்லா பொறுப்பையும் எங்கள் ஆசிரியை எடுத்து கொள்வார். என் நடன ஆசிரியை எங்களுக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்ததால் எனக்கு எந்த பிரச்னையும் கிடையாது. ஒவ்வொறு நிகழ்ச்சிக்கும் அப்புகுட்டனின் அம்மா வருவார். மகனின் நடன நிகழ்ச்சியை கண்டு களித்து சந்தோஷப்படுவார்.

அந்த காலத்தில் பொண்ணுங்கல்லாம் ஆம்பிள பசங்களோடு பேசக்கூடாது என்று ஒரு விதி. பேசினால் தோலை உரித்துவிடுவார்கள். ஆனால் அவன் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் விசேஷ நாட்களிலும் எங்கள் வீட்டுக்கு விளையாட வருவான். அப்பொழுதெல்லாம் சந்திரிகாவும் வருவாள். விசேஷ நாட்களில் அவன் அம்மா எங்களுக்காக செய்து அனுப்பும் 'அட பிரதமனை' யாருக்கும் தெரியாமல் ஒரு 'செரட்டையில்' ஊற்றி, தென்னை ஓலையால் ஒரு சின்ன 'ஸ்பூன்' செய்து, வைக்கோல் போருக்கு பின் போய் ஒழிந்து சாப்பிடுவோம். மாமரத்து கிளைகளில் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம். அப்பா மதியம் சாப்பாட்டுக்கு வரும்போது ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு வருவார். ஒரே ஓட்டம்தான்.

இது மாதிரி ஒரு நாள் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது அப்பு குட்டனின் அம்மா வந்து அவனை 'நாட்டிற்கு' செல்ல வேண்டுமென்று அழைத்துக்கொண்டு சென்றார். இரண்டு மாதம் அவனை காணவில்லை. திடீரென்று ஒரு நாள் மாலை க்ளாஸ்க்கு வந்தான். சரியாக பேசவில்லை. நடனத்தில் கவனம் இல்லை. அதன் பிறகு எங்களிடம் பேசுவதை குறைத்துவிட்டான். லீவு நாட்களில் வருவதை நிறுத்திக் கொண்டான். ஆனால் எங்கள் டீச்சர் மட்டும் அவனிடம் மிக அன்பாக இருந்தார். எந்த தப்பு செய்தாலும் திட்ட மாட்டார். ஒரு நாள் டீச்சர் வீட்டில் இல்லாத போது, சந்திரிகா அப்பு குட்டனிடம் , 'எடா, என்னாச்சு ' என்றாள். உடனே பயங்கரமாக அழுதான். 16 வயது அப்புகுட்டன் தேம்பி தேம்பி அழுவதை பார்த்ததும் எங்களுக்கு பயமெடுத்துவிட்டது. எப்படியோ சமாதான படுத்தியபோது அவன் 'என்டெ அச்சன் மரிச்சு போயி' என்றான். அவன் அப்பா கொல்லத்தில் கதகளி மாஸ்டரென்றும் அவனுக்கு பத்து வயதாகிருக்கும்போது அவர் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்டார் என்றும் தெரிய வந்தது. அதனால்தான் பிழைப்பதற்காக எங்கள் ஊருக்கு வந்திருந்தார்கள். ஆனாலும் அச்சனை அவனுக்கு ரொம்பவே பிடிக்கும் என்றும் அவருக்காகவே அவன் பரத நாட்டியம் வகுப்பில் சேர்ந்ததாகவும் சொன்னான். மாதா மாதம் அவர் அவனுடைய செலவுக்கு பணம் அனுப்புவாரென்றும், நிறைய சொத்துக்கள் கொல்லத்தில் உண்டும் என்று சொன்னான். இங்கு வேலை பார்க்கும் பணம் வீட்டு வாடகை கொடுக்க மாத்திரம்.

கொஞச நாளில் நான் டான்ஸ் க்ளாசுக்கு போவதை நிறுத்திவிட்டேன். எப்பவாது அவன் வேலை செய்த ஆஸ்பத்திரிக்கு உடம்பு முடியாமல் போனால் மட்டும் அவனை பார்ப்பேன். அவன் நல்ல பரத நாட்டிய கலைஞனாகினான். நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டான். மருத்துவ கல்லூரிக்கு போன பிறகு இதெல்லாம் மறந்தே விட்டது.

ஒரு தடவை நானும் மாசியும் எங்கள் ஊரிலிருந்து கொல்லம் போயிருந்த போது அப்பு குட்டன் வீட்டுக்கு சென்றோம். (என் தம்பியிடம் நல்ல பழக்கம் ). வீட்டை பார்த்ததும் அசந்தே விட்டோம். அவன் அப்பா வாழ்ந்த வீடு. அவர் இறந்த கொஞ்ச நாட்களில் அவரோடு கூட வாழ்ந்த பெண்மணியும் தவறி விட்டார். அப்பாவிற்கு பிடித்த பரத நாட்டியத்தை அங்கு கற்று கொடுப்பதாக சொன்னான். திருமணம் செய்ய போவதில்லை என்றான்.. அவன் அம்மா மிகவும் மெலிந்து காணப்பட்டார். கொல்லத்திற்கு வந்ததிலிருந்து குடி பழக்கம் வந்து விட்டதாக கூறி, மாசியிடம் அவனுக்கு அட்வைஸ் பண்ணும் படி சொன்னார். இரண்டு நாட்கள் நாங்கள் தங்கி இருந்த போது மிக பாசத்தோடு கவனித்துக்கொண்டான். அடை பிரதமனும் செய்தார். முதன் முதலில் காலில் சலங்கை கட்டிய அன்று உடுத்தியிருந்த பட்டு வேஷ்டியையும் அந்த சலங்கையும் கொண்டு வந்து காண்பித்து பழைய நினைவுகளை அசை போட்டான்..... மாசிக்காக சில நாட்டிய முத்திரைகளை சொல்லிக்கொடுத்தான்.

1990 களில் நாங்கள் வேலூரிலிருந்த போது அவன் அம்மாவிற்கு மார்பு புற்று நோய்க்கு சிகிச்சை செய்வதற்காக வந்த போது மாசி அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்தார். எதிர்பாராத விதமாக அவன் அம்மா வேலூரிலே இறந்துவிட்டபோது ஆம்புலன்ஸ் arrange பண்ணி பத்திரமாக செல்ல எல்லா ஏற்பாடும் செய்து கொடுத்தார். ஆம்புலன்ஸில் ஏறும் போது அவன் மாசியின் கையை பிடித்து அழுதது..........

நாங்களும் ஊர் ஊராக சுற்ற வேண்டிய சூழ்நிலை. அவனை மறந்தே விட்டேன். ஆனாலும் சில சமயங்களில் தூர்தர்ஷனில் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் ஒளி பரப்பும் போது அவன் நியாபகம் வரும். அப்புறம் மறந்து விடும்.

இன்று காலையில் 'அப்பு குட்டனை' ஆஸ்பத்திரி லாபியில் சந்திக்க நேர்ந்தது. எனக்கு சுத்தமாக அடையாளம் தெரியவில்லை. அவன் தான் என்னை முதலில் பார்த்து என் desk-க்கு வந்தான். மெலிந்து சதை எதுவுமில்லாமல்.... அப்படி ஒரு பரிதாபம்... 'பீடிவலித்து'-ம் 'சாரயம்' குடித்தும் குடலிலும், ஈரலிலும் புற்று வியாதி. அதற்கு மேல் hepatitis- B - -ம் சேர்ந்து கொண்டது. கண்களிலிருந்து கண்ணீர். திருவனந்தபுரத்திலுள்ள புற்று நோய் மையத்தில் சிகிச்சை எடுத்து ஒரு பயனுமில்லை. இங்கு சிகிச்சை செய்ய வந்திருக்கிறான். கை கால்களெல்லாம் உதரல். நிற்க இயலவில்லை. எப்படி பட்ட ஒரு நடன கலைஞன்... தாம்பாளத்தில் ஒற்ற காலில் எப்படி நின்று ஆடுவான்.. .. ஆனால் இன்று......

மாசி இறந்துவிட்டதை பற்றி சொன்னதும் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தான். என் கண்களிலும் கண்ணீர். எதுவும் பேச முடியாத ஒரு இடத்தில் நான்.......

THE WORLD IS SO SMALL.....


புகை நமக்கு பகை.......

குடி எல்லாவற்றையும் கெடுக்கும்.....

CHANGE YOUR LIFE STYLE TO PREVENT CANCER.

31 comments:

மங்கை said...

ஹ்ம்ம் நெகிழ வைத்த பதிவு டாக்ட்ரம்மா...ஹ்ம்ம்

பங்காளி... said...
This comment has been removed by the author.
Thekkikattan|தெகா said...
This comment has been removed by the author.
முத்துலெட்சுமி said...

oh my god ... நண்பர்களை பல நாட்கள் கடந்து பார்க்கும் போது நல்ல நிலைமையில் பார்த்தால் சந்தோஷம்..அதுவே இப்படி ஒரு கோலத்தில் பார்ப்பது போன்ற கடினமான விசயம் வேறில்லை.

தருமி said...

ரொம்ப நல்ல பதிவு. மனச தொடுது. பாவம் ...

Thekkikattan|தெகா said...

டாக்டர்,

ஒரு சினிமாக் கதையைப்படிக்கிற சுவராசியம் இருந்தது, உங்களின் எழுத்து நடையில்.

ஆனால், கடைசியில் ரொம்ப டச்சிங்காக போயி விட்டது. ஒரு சினிமா கதா நாயகனுக்கே உரிய முடிவு மாதிரி... ஒரு அப்பாவின் மெத்தனப் போக்கால் ஒருவரின் வாழ்வு இப்படிப்போனதாக வைத்துக்கொள்ளலாமா? பாவம் அந்தச் சாகோதரர். கேட்டதாகக் கூறுங்கள்...

பங்காளி... said...

வேறென்ன சொல்ல...

மனசு பாரமாயிருக்கிறது...

ஸென் பேசலாம்...

ஆனால் வேண்டாம்....

ம்ம்ம்ம்ம்ம்

இலவசக்கொத்தனார் said...

மனதத்தொட்ட பதிவு டாக்டர்.

அபி அப்பா said...

என்னத்த சொல்ல, முத்துலெஷ்மி சொன்னது போல நீண்ண்ட நாள் கழித்து சந்திக்கும் போது நல்ல நிலமையில் இருந்தால் தான் சந்தோஷம், என்ன பண்ற்றது விதி மற்றும் அந்த கெட்ட பழக்கம், மனசு பாரமா போயிடுச்சு:-(

காட்டாறு said...

நெகிழ்ச்சியான நிகழ்வு. தனிமையின் தாக்குதலோன்னு மனசுக்கு படுது டாக்டர்.

Anonymous said...

இதப்படிச்சு ஒருத்தராவது திருந்துனா சரி. நல்லா எழுதிருக்கீங்க‌

துளசி கோபால் said...

அப்புக்குட்டனை நினைச்சு மனசு ரொம்ப வேதனையா இருக்கு.
கேரளாவில் பீடி & சாராயம் குடிக்காத (ஆண்)மக்களை விரல்
விட்டு எண்ணிரலாம் போலத்தான் இருக்கு.

அடுத்தமுறை அப்புக்குட்டனைப் பார்த்தால் நாங்கள் ரொம்பவும்
விசாரிச்சதாச் சொல்லுங்க.

கோபிநாத் said...

:-((

delphine said...

நெகிழ வச்ச நிகழ்ச்சிதான் மங்கை!

என்ன செய்ய முத்துலட்சுமி..நம்முடைய சின்ன வயது நண்பர்களை இந்த நிலயில் பார்க்கும் போது மிக வேதனைதான்.

அவனை சந்தித்தது ..என்னுடைய மனதை ரொம்ப பாத்தித்தது. நன்றி தருமி சார்.

தெகா.. நீங்கள் சொல்வது சரியே. அப்பாவின் மெத்தன போக்கும் ஒரு காரணம்தான்.

delphine said...

பங்காளி..ஸென் அப்படீன்னா?

நன்றி கொத்ஸ்..

அபி அப்பா.. இந்த பதிவை அடிக்கடி படிங்க.. சரியா?
காட்டாறு, தனிமையும் அவன் தந்தையின் செயலும் ஒரு காரணம்தானே!

அம்மிணி .. ம்ம்ம். திருந்த வேண்டும் என்ற ஆசைதான்.

PPattian : புபட்டியன் said...

ஒரு தேர்ந்த கதாசிரியரை போல மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறீர்கள் டாக்டர். அப்புக்குட்டன் குடிக்கும் பீடிக்கும் அடிமையாக காரணங்கள் இந்த பதிவிலேயே தெளிவாகத் தெரிகிறது. பரிதாபம்...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

மேடம்.. அருமையான எழுத்து நடையால் கட்டிப் போட்டுவிட்டீர்கள். எவ்வளவுதான் ஊடகங்கள் வழியாகப் பிரச்சாரம் செய்தாலும் மன விரக்தியைப் போக்க குடும்பம், சுற்றம், நட்பு இவைகளைத் தவிர வேறு எந்த மருந்தும் இல்லை. இது இல்லாமல் போகும்போதுதான் பலருமம் மது என்னும் அரக்கனிடம் கை நீட்டுகின்றனர். இது எனது சொந்த அனுபவம்..

இதை நான்கு பேர் படித்தாவது குடியைக் குறைத்துக் கொண்டால் அந்தப் புண்ணியம் நிச்சயம் உங்களையே சேரும்.. வாழ்க டாக்டர்..

பொன்வண்டு said...

கொஞ்ச நேரம் ஒரு மாதிரி ஆகிவிட்டது படித்த பிறகு.

நானும் என் நண்பர்களிடம் சொன்னாலும் யாரும் மதிப்பதில்லை. என்னுடன் பணிபுரியும் ஒருத்தி என்னை வேஸ்ட் என்றாள் நான் புகைபிடிக்காததால்.

சுல்தான் said...

இந்தப் புகையும் குடியும் இன்னும் எத்தனை அப்புக்குட்டன்களை பாழாக்க போகிறதோ பாவம்.

delphine said...

வாங்க துளசி.. கேரளாவில் நிறைய ஆண்கள் வேலைக்கும் செல்ல் மாட்டார்கள். பீடியை வலித்துவிட்டு நாயர் டீ கடையில் அரசியல் பேசியே பொழுதை ஓட்டி விடுவார்கள்.

கோபி...:(

delphine said...

புபட்டியன் ... நன்றி.. ஒரு வேளை என் மனதில் இருந்தவைகளை கொட்டி விட்டதால் அப்படி தோணுதோ!

உண்மைதமிழன் சார்.. நன்றி.. நீங்கள் எழுதியிருப்பதை பார்த்து எனக்கும் கண்கள் கலங்குகின்றன. நம் மக்கள் நிச்சயம் திருந்த வேண்டும்.. இப்ப பண புழக்கம் அதிகமாக இருப்பது இப்படி போதை வஸ்துகளுக்கு அடிமையாக செய்கிறது.

பொன்வண்டு
என்னுடன் பணிபுரியும் ஒருத்தி என்னை வேஸ்ட் என்றாள் நான் புகைபிடிக்காததால்///
கவலை படாதீர்கள். கஷடங்கள் என்று வந்தால் இவர்கள் யாரும் நம் கூட வருவது கிடையாது.. தமிழன் சார் சொல்வது போல நமக்கு நல்ல உறவுகள் நிச்சயம் தேவை. i repeat நல்ல உறவுகள்.

பங்காளி... said...

//பங்காளி..ஸென் அப்படீன்னா?//

என்ன ஒரு கேள்வி...இப்படி கேக்கலாமா டாக்டர்...

(இனி வருவது வெளம்பரம்...ஹி..ஹி..)

இங்க வலைப்பதிவுல ஸ்ரீலஸ்ரீ பங்காளி சுவாமிகள்னு ஒரு மகான் ஸென் பத்தி கொஞ்சம் எழுதீருக்கார்...அதை நீங்க பார்க்கலையா....

இங்க பாருங்க டாக்டர்....

http://pangaali.blogspot.com/2007/04/blog-post_18.html

நம்ம குட்டி பங்காளி அவந்திகா கூட நிறைய ஸென் கதை எழுதிருக்காங்க....

கண்மணி said...

மனசு கனத்துப் போனதால் லேட்டான பின்னூட்டம்.
நம்மைச் சேர்ந்தவங்க எல்லோரும் நல்லாயிருக்கனும்னு மனசு ஆசைப்படுது.

பத்மா அர்விந்த் said...

உங்கள் நண்பன் வலியை பொறுத்து கொள்ள சக்தி பெற பிரார்த்திக்கிறேன். ஆனாலும் நம்முடைய செயல்கள், பழக்கங்களுக்கு நாம்தான் காரணமாக இருக்க முடியுமே தவிர அப்பாவின் செயல் என்று பிறர் மீது பழி போடுதல் கூடாது. நிறைய போதை பழக்கத்தீற்கு அடிமையானவர்கள் ஏபோதும் சொல்லும் ஒரு சாக்கு. மனக்கட்டுப்பாடும் வடிகாலுக்கு நல்ல ஆரோக்கியமான ஒரு பழக்கமும் இல்லாததுதான் காரணம். அப்புகுட்டனின் அம்மாவிற்கு இன்னும் வலி இருந்திருக்கும் அவருடைய கணவன் செயலால், ஆனால் அவர் என்ன போதை பழகத்தீற்கு அடிமையானாரா என்ன?

Anonymous said...

:))

Thekkikattan|தெகா said...

பத்மா அர்விந்த்,

//அப்புகுட்டனின் அம்மாவிற்கு இன்னும் வலி இருந்திருக்கும் அவருடைய கணவன் செயலால், ஆனால் அவர் என்ன போதை பழகத்தீற்கு அடிமையானாரா என்ன?//

அம்மா அடைந்த வலி பக்குவமாக எடுத்துக் கொள்ளும் பருவத்தில், ஆனால், அப்புக்குட்டன் அந்த வலியை தனது சிறு வயது முதலே பார்த்து வளர்ந்ததால் அவருக்கு தனது வாழ்வின் மீதே விரக்தி வந்திருக்கலாம் அல்லவா? அவரின் திருமண வாழ்வு என்னவாகி விட்டது(டாக், ஒன்றும் கூறவில்லையே அதனைப்பற்றி...)? எந்தந்த ரீதியில் குழந்தைப் பருவத்தையொட்டி நடந்த சில நிகழ்வுகள் சில மனக் கோளாறுகளாக பின்னாலில் ஒருவரை பீடிக்கிறது...?

SurveySan said...

மாசி யாரு?

டச்சிங் பதிவு.

delphine said...

மாசி என் கணவர் சர்வேசன்..!
http://besafeonroads.blogspot.com/

பாச மலர் said...

இப்போதுதான் படித்தேன்..மனதை என்னவோ செய்கிறது.

அழகான நடை..

வல்லிசிம்ஹன் said...

டெல்ஃபின்.
சாரி.
இப்போ அப்புக்குட்டன் நலமாக இருக்காரா.

delphine said...

பாசமலர் வருகைக்கு நன்றி.
வல்லி...
அப்புகுட்டனை பற்றி எந்த தகவலுமில்லை.