Monday, September 24, 2007

"அபாயத்து பாட்டி"

"அபாயத்து பாட்டி"

அபாயத்து பாட்டியின் பூர்வீகம் எனக்கு தெரியாது. எப்பொழுதும் வெள்ளை சேலை உடுத்திருக்கும் பாட்டியாக மட்டுமே எனக்கு அவரை தெரியும். பாட்டியின் வீடு எங்கள் வீட்டிலிருந்து ஒரு மைல் தூரமிருக்கும். வீடு என்றால் பெரீய வீடல்ல... ... ஒரு சின்ன ரூம் மாத்திரமே. எனக்கு நியாபகம் தெரிந்த நாள் முதல் பாட்டி கலையில் ஏழு மணிக்கெல்லாம் எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவார். சாயங்காலம் ஆறு மணிக்கு திரும்புவார். காலையில் ஐந்து மணிக்கு எந்திரிச்சு, பக்கத்திலுள்ள கோவிலுக்கு போய் பூசை பார்த்துவிட்டுதான் எங்கள் வீட்டிற்கு வருவார். வந்ததும் அம்மா கொடுக்கும் காபி (கருப்புக்கட்டி காபி) குடித்துவிட்டு வீட்டின் பின் முற்றத்தில் காலை நீட்டிக்கொண்டு உட்காருவார். பின் முற்றத்த்தைதான் எல்லோரும் அதிகம் உபயோகிப்பார்கள். யாரும் ஒரு ரோஜாப்பூவை கூட பறிக்க முடியாது. பாட்டி ஒரு வெற்றிலை இடிக்கும் உரலை எடுத்து வைத்துக் கொட்டை பாக்கை உடைத்து அதை தல்லி மென்னுவது ஒரு அழகுதான். அதற்கு பங்கு போடுவதற்கு நானும் போய் உட்கார்ந்துக்குவேன். அம்மாவிற்கும் பாட்டிக்கும் இதனால் எப்பொழுதும் சண்டை வரும். (செல்லமாக).

என் அக்காவெல்லாம் வெளியூரில் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்ததால் அம்மாவும் அப்பாவும் அடிக்கடி, மதுரை, தூத்துக்குடி, ஆலப்புழா என்று போய்விடுவார்கள். அப்போதெல்லாம் பாட்டிதான் உதவுவார். எங்களுக்கு வீட்டில் காவல் அவர்தான். பெட் ஷீட் குடுத்தாலும் வேண்டாமென்று சொல்லிவிட்டு தன் வெள்ளை சேலையை விரித்து படுத்துக் கொள்வார். காலையில் எந்திரிச்சு கோயிலுக்கும் போவார்.

வருடத்தில் இரண்டு முறை வயல் அறுவடை ஆகும். கதிரடித்து முடிவதற்கு எப்படியும் இருபது நாட்களாகும். அப்பவும் பாட்டிதான் களத்தில்(வீட்டிற்கு பின்புதான் களம்) ஒரு நார் கட்டில் போட்டு, தன் சேலையை விரித்து படுத்திருப்பார். "சூடடிக்க" வரும் குட்டி பசங்கள் அவர் காதில் போட்டிருக்கும் பாம்படத்தை தூங்கும் போது வெட்டி எடுத்துக் கொள்வோம் என்று பாட்டியிடம் வம்பு பண்ணுவாங்க. பாட்டியும் சிரித்து விட்டு ராத்திரி தூங்காம விழிச்சு இருப்பாங்க. வீட்டிலுள்ள எல்லா விசேஷங்களுக்கும் பாட்டி நிச்சயம் இருப்பாங்க. வேலை எதுவும் செய்ய இயலாவிட்டாலும் அவர் ஒரு காவல் தெய்வம் மாதிரி. வாய் மட்டும் எப்பொழுதும் வெற்றிலை மென்னுக்கிட்டு இருக்கும்.

அம்மாவிற்கு மாடுகள் என்றால் ஒரு பெரிய passion. பெரிய தொழுவமே உண்டு. புறா கூடுகள், கோழி கூடுகள், love birds... etc.. எல்லாம் உண்டு. பாலை அவர் சொசைட்டிக்குதான் கொடுப்பார். ஆனாலும் சில்லறையாக பால் வாங்க சிலர் வருவார்கள். அப்பொழுதெல்லாம் நாந்தான் பால் ஊற்றிக் கொடுப்பேன். அந்த சில்லரையெல்லாம் எனக்குதான். அதிலிருந்துதான் பாட்டிக்கு நான் பக்கத்து முக்கு கடையில் போய் வெற்றிலை வாங்கிட்டு வருவேன். அதனாலே பாட்டிக்கு என் மேல் ஒரு விருப்பம்.

இந்த மாடுகள் எல்லாம் ரொம்ப உசத்தி மாடுகள். அதனால அப்பா ஒரு சின்ன swimming pool கட்டினார். (மாடுகளை குளிப்பாட்ட). பாட்டி குளி ரூமில் குளிக்காமல் அதில் தான் குளிப்பார். பாட்டிக்கு எப்பவுமே 'உமிக்கரி, கோபால் பல்பொடி' மீது ஒரு வெறுப்பு. வீட்டில அக்காவுங்க எல்லாம்
உபயோகிக்கும் களிம்பு மேல ரொம்ப பிரியம். இப்படித்தான் ஒரு அறுவடை நாளில் பாட்டி குளிக்க போனாங்க. அங்கே இருந்த களிம்பை எடுத்து பல்? தேச்சாங்க. ஒரே நமைச்சல். வாயெல்லாம் வெந்து போய் ஒண்ணுமே பேச முடியாம ... கண்ணெல்லாம் சிகப்பாகி.. யாருக்கும் ஒண்ணுமே புரியல.
பால் கறக்கிற கோனார் பாட்டியை முற்றத்தில் தூக்கிக் கொண்டு வந்து போட்டார். பாட்டியால் ஒண்ணுமே பேச முடியலை. உடனே பக்கத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் அங்கு க்ளுகோஸ் எல்லம் ஏற்றி ஒரு வழியாக பாட்டி சாயாந்தரம் கண்ண முழிச்சு பார்த்தாங்க. பாட்டி கூட நாந்தான் ஆஸ்பத்திரியில். அப்பா ஒரே ஏச்சுதான். வயலறுக்கிர நேரத்தில் கிழவி இப்படி உடம்பு முடியாம ஆஸ்பத்திரியில படுக்க வேண்டியதாச்சேன்னு. அம்மா ம்ட்டும் எங்கிட்ட பாட்டிய பத்திரமா
பார்த்துக்க சொல்லி கையில் நிறைய காசும் கொடுத்துட்டு போனாங்க. எப்படியோ ராத்திரிக்கு வீட்டுக்கு போய்விட்டோம்.

அடுத்த நாள் காலையில் பாட்டி என்னை மிக ரகசிய்மா கூப்பிட்டு அந்த களிம்பை காண்பித்து " ஏன் கண்ணு , நீங்கல்லாம் இத வச்சு பல் தேய்க்கும்போது ஒண்ணுமே ஆகல எனக்கு மட்டும் ஏன் உதடு வீங்கிடுச்சுன்னு கேட்டாங்க. அப்பத்தான் எனக்கு விஷயமே புரிஞ்சுது. பாட்டி உபயோகிச்சது " பெனிசில்லின் ஆயிண்ட்மெண்ட்". கன்று குட்டிய குளிப்பாட்டி விட்டு அதுக புண்ணுல போடுவதற்காக வாங்கி வச்சிருந்த ஆயிண்ட்மெண்டை பாட்டி உபயோகிச்சுருக்காங்க..பாவம். பாட்டி was allergic to penicillin. எப்படியோ பாட்டி பிளைச்சது கடவுளின் செயல்தான்.

எனக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடச்சத பாட்டிக்கிட்ட சொன்னதும் பாட்டிக்கு ரொம்ப சந்தோஷம். ஆனால் அவங்களை விட்டு விட்டு தொலை தூரம் போறேன்னு கவலை. அம்மாகிட்ட ஒரு பத்து ஏழைங்களுக்கு பாயசத்தோடு சாப்பாடு போட சொல்லி ஆளுங்களையும் கோவிலிலிருந்து அழைச்சுக்கிட்டு வந்தாங்க.

வீட்டில கடை குட்டியான நான் மெட்ராஸ் கிளம்பிற அன்றைக்கு பாட்டிக்கு ஒரே சங்கடம். எங்க compound-ல் குடியிருக்கிறவங்க, வீட்டில வேலை செய்கிறவங்க, அப்பா மில்லுல்ல வேலை பார்க்கிறவுங்கன்னு ஏகப்பட்ட கூட்டம். வீட்டில எல்லா பெண்ணுங்களும் வெளியூருக்கு படிக்க
போயாச்சு. நான் தான் கடைசி.... ஜெபமெல்லாம் செஞ்சு முடிச்சப்பறம், நான் கிளம்பிறச்ச, எனக்கோ ஒரே அழுகை.... புதுசா மெட்ராசுக்கு செல்கிறேன். பாட்டி என்ன பிடிச்சு முத்தம் கொடுத்து கையில் எதையோ அழுத்தினார். அது ஒரு சுருக்கு பை.. அதற்குள் கொஞ்சம் காசு...ஒரு வெற்றிலைக்குள் மடிச்சு கொஞ்சம் தல்லுன வெற்றில பாக்கு....

மூணு மாசம் கழிச்சு அம்மாகிட்ட இருந்து ஒரு கடிதம். அதில் பாட்டி இறந்துவிட்டதாக ..மனசு ரொம்ப கவலையா இருந்துச்சு...பாட்டிக்கு எதற்கு "அபாயத்து பாட்டி" ன்னு பெயர் வச்சாங்கன்னு எனக்கு தெரியாது. பெண் பிள்ளைகள் அதிகம் இருந்த எங்கள் வீட்டில் யாருக்கும் ஒரு அபாயமும் வராமா எங்களையெல்லாம் பார்த்துகிட்டதற்க்காகவான்னு இன்னும் எனக்கு பதில் தெரியல.......

Friday, September 21, 2007

மக்கள்ஸ் கொஞ்சம் சொல்லிகொடுங்க!

I agree that I am an old timer....

எவ்வளவு முன் நோக்கு எண்ணங்கள் இருந்தாலும் இந்த காலத்து இளைஞர்களுடன் போட்டி போடுவது கஷ்டம்தான்.

பள்ளிகூடத்தில் படிக்கும் போது லீவு லெட்டர்களும், மாமா கொடுத்த பரிசு பொருளுக்கு நன்றி சொல்லியும் கடிதம் எழுத கற்று கொடுத்தார்கள். கடிதம் எழுதும் முறைகளை நான் கற்று கொண்டேன். கடிதமென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு முறையிருந்தது. ஆனால் இந்த ?பத்து வருடங்களுக்கிடையில் என்ன மாற்றங்கள்!

இங்கு சென்னை வந்த பிறகு, அதுவும் இந்த அட்மினிஸ்ட்ரேஷன் வேலை எடுத்த பிறகு எனக்கு தினசரி வரும் மெயில்கள் என்னை ஆச்ச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. அடடா... அதுவும் இந்த இன்ட்ரா மெயில்கள் (intra mails)... ...... ஒரே கம்பெனியில் வேலை பார்க்கும் மக்கள் தங்கள் சீனியர்களுக்கும், தங்கள் கீழ் வேலை செய்பவர்களுக்கும் அனுப்பும் மெயில்களை வாசிக்கும் போது உண்மையிலே மெய் சிலிர்க்க்கிறது......
எனக்கு இன்று வந்த ஒரு மெயில் இப்படி ஆரம்பிக்கிறது....
Hi m'm. mtg at 10. plz cme 2 conf hall.
madam என்று டைப் பண்ண எவ்வளவு நேரமாகும்? அதுவும் hi.. ..
இவர்களுக்கு என்று ஒரு dictionary உருவாக்கலாம் போலிருக்குது. ..
fyki- for your kind information.
mtg-meeting.
grtg-greeting... (மறந்து கூட யாரும் நம்பள greet பண்ண மாட்டாங்க :)

wrtcon - with reference telephonic conversation...

மக்கள்ஸ்... கொஞ்சம் சொல்லி கொடுங்க.. இந்த acronyms???---

Wednesday, September 12, 2007

அப்புகுட்டனும் நானும்...

அப்புக்குட்டனை நான் முதலில் சந்தித்த போது எனக்கு பத்து வயது. ஒரு நாள் மாலை ஆறு மணிக்கு கொஞ்சம் நாணத்தோடு 'தையா தை' என்று நடனம் ஆடிக்கொண்டிருந்ததை பார்த்த போது இந்த நாட்டு புரத்திற்கு ஒரு 'தையா தை' தேவைதானா என்று நானும் என் கூட நடனம் பயின்று கொண்டிருந்த சந்திரிகாவும் ஒரே கிண்டல். எங்களிருவருக்கும் பரத நாட்டியத்தை கரைத்துக் குடித்து விட்டதாக எப்பொழுதும் ஒரு மமதை. கிட்ட தட்ட மூன்று வருடங்களாக நடனம் கற்றும் , அந்த பாம்பு நடனமும், மயில் நடனமும் சரியான படி ஆட எங்கள் இருவருக்குமே வராது.

ஒரு நாள் தவறாது மாலை ஆறு மணிக்கு நடன வகுப்புக்கு அப்பு குட்டன் ஆஜர் ஆகி விடுவான். நல்ல கருப்பு நிறம். ஆனாலும் ஒரு அழகு. அதிகம் பேசமாட்டான். எங்கள் வீட்டு பக்கத்திலுள்ள ஒரு மருத்துவ மனையில் கம்பௌண்டராக காலையிலிருந்து மாலை வரை வேலை. அதன் பிறகு பரத நாட்டிய வகுப்பு. அவனை எங்கள் வழிக்கு இழுத்து வர ஆறு மாதம் பிடித்தது. இதற்குள் அவன் நல்ல ப்ராக்டீஸ் எடுத்து எங்களை மிஞ்சும் நிலையில் கற்றுக்கொண்டான். 'நாட்டியமே மூச்சு' என்கிற ஒரு வெறி அவனிடமிருந்தது.

மாதர் சங்க நிகழ்ச்சிக்காக நாங்கள் யாவரும் ஒரு நடனம் ஆடுவதற்காக பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தோம். அவன் நடுவிலும் நானும் சந்திரிகாவும் அவன் பக்கத்திலும் ஆடுவதாக இருந்தோம். கடைசியில் சந்திரிகாவின் அம்மா தன் மகள் ஒரு ஆணோடு ஆடக்கூடாது என்று அடம் பிடித்ததால் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள முடியாது போலாகிவிட்டது...... அப்பு குட்டனுக்கு பயங்கர கவலை. உடனே அவன் தன் அம்மாவை அழைத்துக்கொண்டு வந்து சந்திரிகாவின் தாயை பார்த்து சமாதானம் பண்ணினான். அன்றுதான் நானும் அவன் அம்மாவை முதலில் பார்த்தேன். ஒல்லியான, குட்டையான தேகம். ஒரு மலையாளிக்குரிய உடை, நெற்றியில் ஒரு சின்ன சந்தன பொட்டு... நிதானமான ஆனால் கெஞ்சின பேச்சு..,..

நாங்கள் காந்தி ஜயந்தி அன்று மாதர் சங்கத்தில் ஆடினோம். எங்களுக்கு சன்மானமாக ஒரு ரூபாய் கிடைத்தது. அவன் அதை மிக பய பக்தியோடு அம்மாவிடம் கொடுப்பதை பார்த்து அவனை கிண்டல் பண்ணினோம்... சிரித்தான்.. முதல் முதலாக தன்னை மறந்த சிரிப்பு .. அடைய முடியாத ஒன்றை அடைந்துவிட்டதாக அவ்வளவு ஒரு மகிழ்ச்சி. ......

அதன் பிறகும் ஒரு சில நிகழ்ச்சிகள் சேர்ந்து செய்தோம்..எங்கள் வீட்டிலிருந்தும் சந்திரிகா வீட்டிலிருந்தும் யாரும் வரமாட்டார்கள். எல்லா பொறுப்பையும் எங்கள் ஆசிரியை எடுத்து கொள்வார். என் நடன ஆசிரியை எங்களுக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்ததால் எனக்கு எந்த பிரச்னையும் கிடையாது. ஒவ்வொறு நிகழ்ச்சிக்கும் அப்புகுட்டனின் அம்மா வருவார். மகனின் நடன நிகழ்ச்சியை கண்டு களித்து சந்தோஷப்படுவார்.

அந்த காலத்தில் பொண்ணுங்கல்லாம் ஆம்பிள பசங்களோடு பேசக்கூடாது என்று ஒரு விதி. பேசினால் தோலை உரித்துவிடுவார்கள். ஆனால் அவன் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் விசேஷ நாட்களிலும் எங்கள் வீட்டுக்கு விளையாட வருவான். அப்பொழுதெல்லாம் சந்திரிகாவும் வருவாள். விசேஷ நாட்களில் அவன் அம்மா எங்களுக்காக செய்து அனுப்பும் 'அட பிரதமனை' யாருக்கும் தெரியாமல் ஒரு 'செரட்டையில்' ஊற்றி, தென்னை ஓலையால் ஒரு சின்ன 'ஸ்பூன்' செய்து, வைக்கோல் போருக்கு பின் போய் ஒழிந்து சாப்பிடுவோம். மாமரத்து கிளைகளில் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம். அப்பா மதியம் சாப்பாட்டுக்கு வரும்போது ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு வருவார். ஒரே ஓட்டம்தான்.

இது மாதிரி ஒரு நாள் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது அப்பு குட்டனின் அம்மா வந்து அவனை 'நாட்டிற்கு' செல்ல வேண்டுமென்று அழைத்துக்கொண்டு சென்றார். இரண்டு மாதம் அவனை காணவில்லை. திடீரென்று ஒரு நாள் மாலை க்ளாஸ்க்கு வந்தான். சரியாக பேசவில்லை. நடனத்தில் கவனம் இல்லை. அதன் பிறகு எங்களிடம் பேசுவதை குறைத்துவிட்டான். லீவு நாட்களில் வருவதை நிறுத்திக் கொண்டான். ஆனால் எங்கள் டீச்சர் மட்டும் அவனிடம் மிக அன்பாக இருந்தார். எந்த தப்பு செய்தாலும் திட்ட மாட்டார். ஒரு நாள் டீச்சர் வீட்டில் இல்லாத போது, சந்திரிகா அப்பு குட்டனிடம் , 'எடா, என்னாச்சு ' என்றாள். உடனே பயங்கரமாக அழுதான். 16 வயது அப்புகுட்டன் தேம்பி தேம்பி அழுவதை பார்த்ததும் எங்களுக்கு பயமெடுத்துவிட்டது. எப்படியோ சமாதான படுத்தியபோது அவன் 'என்டெ அச்சன் மரிச்சு போயி' என்றான். அவன் அப்பா கொல்லத்தில் கதகளி மாஸ்டரென்றும் அவனுக்கு பத்து வயதாகிருக்கும்போது அவர் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்டார் என்றும் தெரிய வந்தது. அதனால்தான் பிழைப்பதற்காக எங்கள் ஊருக்கு வந்திருந்தார்கள். ஆனாலும் அச்சனை அவனுக்கு ரொம்பவே பிடிக்கும் என்றும் அவருக்காகவே அவன் பரத நாட்டியம் வகுப்பில் சேர்ந்ததாகவும் சொன்னான். மாதா மாதம் அவர் அவனுடைய செலவுக்கு பணம் அனுப்புவாரென்றும், நிறைய சொத்துக்கள் கொல்லத்தில் உண்டும் என்று சொன்னான். இங்கு வேலை பார்க்கும் பணம் வீட்டு வாடகை கொடுக்க மாத்திரம்.

கொஞச நாளில் நான் டான்ஸ் க்ளாசுக்கு போவதை நிறுத்திவிட்டேன். எப்பவாது அவன் வேலை செய்த ஆஸ்பத்திரிக்கு உடம்பு முடியாமல் போனால் மட்டும் அவனை பார்ப்பேன். அவன் நல்ல பரத நாட்டிய கலைஞனாகினான். நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டான். மருத்துவ கல்லூரிக்கு போன பிறகு இதெல்லாம் மறந்தே விட்டது.

ஒரு தடவை நானும் மாசியும் எங்கள் ஊரிலிருந்து கொல்லம் போயிருந்த போது அப்பு குட்டன் வீட்டுக்கு சென்றோம். (என் தம்பியிடம் நல்ல பழக்கம் ). வீட்டை பார்த்ததும் அசந்தே விட்டோம். அவன் அப்பா வாழ்ந்த வீடு. அவர் இறந்த கொஞ்ச நாட்களில் அவரோடு கூட வாழ்ந்த பெண்மணியும் தவறி விட்டார். அப்பாவிற்கு பிடித்த பரத நாட்டியத்தை அங்கு கற்று கொடுப்பதாக சொன்னான். திருமணம் செய்ய போவதில்லை என்றான்.. அவன் அம்மா மிகவும் மெலிந்து காணப்பட்டார். கொல்லத்திற்கு வந்ததிலிருந்து குடி பழக்கம் வந்து விட்டதாக கூறி, மாசியிடம் அவனுக்கு அட்வைஸ் பண்ணும் படி சொன்னார். இரண்டு நாட்கள் நாங்கள் தங்கி இருந்த போது மிக பாசத்தோடு கவனித்துக்கொண்டான். அடை பிரதமனும் செய்தார். முதன் முதலில் காலில் சலங்கை கட்டிய அன்று உடுத்தியிருந்த பட்டு வேஷ்டியையும் அந்த சலங்கையும் கொண்டு வந்து காண்பித்து பழைய நினைவுகளை அசை போட்டான்..... மாசிக்காக சில நாட்டிய முத்திரைகளை சொல்லிக்கொடுத்தான்.

1990 களில் நாங்கள் வேலூரிலிருந்த போது அவன் அம்மாவிற்கு மார்பு புற்று நோய்க்கு சிகிச்சை செய்வதற்காக வந்த போது மாசி அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்தார். எதிர்பாராத விதமாக அவன் அம்மா வேலூரிலே இறந்துவிட்டபோது ஆம்புலன்ஸ் arrange பண்ணி பத்திரமாக செல்ல எல்லா ஏற்பாடும் செய்து கொடுத்தார். ஆம்புலன்ஸில் ஏறும் போது அவன் மாசியின் கையை பிடித்து அழுதது..........

நாங்களும் ஊர் ஊராக சுற்ற வேண்டிய சூழ்நிலை. அவனை மறந்தே விட்டேன். ஆனாலும் சில சமயங்களில் தூர்தர்ஷனில் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் ஒளி பரப்பும் போது அவன் நியாபகம் வரும். அப்புறம் மறந்து விடும்.

இன்று காலையில் 'அப்பு குட்டனை' ஆஸ்பத்திரி லாபியில் சந்திக்க நேர்ந்தது. எனக்கு சுத்தமாக அடையாளம் தெரியவில்லை. அவன் தான் என்னை முதலில் பார்த்து என் desk-க்கு வந்தான். மெலிந்து சதை எதுவுமில்லாமல்.... அப்படி ஒரு பரிதாபம்... 'பீடிவலித்து'-ம் 'சாரயம்' குடித்தும் குடலிலும், ஈரலிலும் புற்று வியாதி. அதற்கு மேல் hepatitis- B - -ம் சேர்ந்து கொண்டது. கண்களிலிருந்து கண்ணீர். திருவனந்தபுரத்திலுள்ள புற்று நோய் மையத்தில் சிகிச்சை எடுத்து ஒரு பயனுமில்லை. இங்கு சிகிச்சை செய்ய வந்திருக்கிறான். கை கால்களெல்லாம் உதரல். நிற்க இயலவில்லை. எப்படி பட்ட ஒரு நடன கலைஞன்... தாம்பாளத்தில் ஒற்ற காலில் எப்படி நின்று ஆடுவான்.. .. ஆனால் இன்று......

மாசி இறந்துவிட்டதை பற்றி சொன்னதும் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தான். என் கண்களிலும் கண்ணீர். எதுவும் பேச முடியாத ஒரு இடத்தில் நான்.......

THE WORLD IS SO SMALL.....


புகை நமக்கு பகை.......

குடி எல்லாவற்றையும் கெடுக்கும்.....

CHANGE YOUR LIFE STYLE TO PREVENT CANCER.

Monday, September 10, 2007

புகை உடலுக்கு பகை.....

புகை உடலுக்கு பகை........
என் பங்குக்கு சில டிப்ஸ்...புகை பிடிப்பதை நிறுத்த ப்ளான் பண்ணியதும் முதலில் நம் குடும்பதிலுள்ள மக்களின் உதவியையும், புகை பிடிக்காத நண்பர்களின் உதவியையும் நாடலாம்.தினசரி உடற் பயிற்சி செய்வதால் புகை பிடிக்கும் எண்ணம் மாறிவிட நிறைய வாய்ப்பு உண்டு. புகை பிடிப்பதை நிறுத்தும்போது சில symptoms உண்டாகும். அப்பொழுது பாசிட்டிவாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். புகை பிடிக்க ஆசை வரும்போது அந்த ஆசையை ஒரு சில நிமிடங்கள் தள்ளி போடலாம். அந்த நேரங்களில் ஏதாவது ஜூஸ் அல்லது தண்ணீர் குடிக்கலாம். அதே நேரம் அந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாறுங்கள்.. வேறு ஏதாவது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை நினைத்து பார்க்கலாம். நல்ல பெரீய மூச்சாக எடுத்து விடவும். சிகரெட்டுக்கு ஆகுமான செலவை தனியாக எடுத்து வைப்பீர்களானால் அது ஒரு பெரிய சேமிப்பாகுவதை காணலாம். புகை பிடிக்க தோன்றுகிற நேரத்தில் "கம்"போன்று ஏதாவது சுவைக்க முயற்சி செய்யவும்.ஒரு நாளைக்கு ஒன்று என்று கணக்கு வைத்து சிகரெட்டை பிடிக்கவும். சிகரெட் இல்லாத ஒவ்வொறு நாளும் நமக்கும், நம் குடும்பத்தார்க்கும் நல்லது என்று சந்தோஷமாக நினைப்போம். நமது சேமிப்பு(SAVINGS) அதிகமாவதை பார்த்து சந்தோஷப்படலாம்.அதில் மிச்சம் பிடித்த பணத்தை வைத்து மனைவிக்கு ஏதாவது பரிசு பொருள் வாங்கிக் கொடுக்கலாமே.!

(டிஸ்கி) நானும் ஒரு டிஸ்கி போடறேன்..இந்த போஸ்ட் யாருக்கு டெடிக்கேட் பண்ரேன்னு தெரியுமா?.. என்னை ரொம்ப கலாய்க்கிற ஒரு சக்கரவர்த்திக்குத்தான். கண்டு பிடிங்க பார்ப்போம்!