Monday, August 27, 2007

*""Need your Brains"""*

என்ன தலைப்பை பார்த்து மலைப்பா? ஆமாங்க! ஆமா! பின்ன நம்ம மூளை சரியா இருந்தாத்தானேங்க நமக்கும், மற்றவர்களுக்கும் இந்த சமூகத்திற்கும் நாம் உதவியாக இருப்போம்! சரி.. ...
சொல்ல வந்தது என்னவென்றால் நம்ம software companies-ல் வேலை பார்க்கும் professionals எல்லாம் நிரம்ப புத்திசாலிகள். நிறைய பேர் campus interview -ல் பெரீய கம்பெனிகளில் வேலை கிடைத்து, மாதம் 50,000/- க்கு மேல் சம்பளம் வாங்குறாங்க. வெளி நாட்டிற்கு வேற செல்றாங்க. கடந்த ஐந்து வருடத்திற்குள் இந்த ஐ.டி நிறுவனங்கள் அபரீதமான வளர்ச்சி அடைந்துள்ளன. டாக்டராகணும்னு இப்ப யாரும் அதிகமாக கனவு காண்பதில்லை...இது ஒரு healthy situation தான். மறுப்பதற்கில்லை. இந்த இளைஞர்களை பாதுகாப்பது எப்படி?சென்னையில் நான் அன்றாடம் பார்க்கும் காட்சிகள் என்னை அதிர வைக்கின்றன. tidel park IT road-ல் நம்ம software engineers, BPO Employees போகும் வண்டிகள் (cabs) எவ்வளவு வேகத்தில் செல்கின்றன தெரியுமா? ஒரு நாள் தவறாது ஏதாவது கம்பெனியை சார்ந்த வண்டி ஆக்ஸிடண்டாகி நிற்கின்றன. BPO Employees பாதி தூக்க கலக்கத்தில் செல்வதை பார்க்கிறேன். சில cab - களில் அளவுக்கு அதிகமாக பயணிப்பவர்களும் உண்டு. காலையில் ஒருநாள் இப்படி பயணம் செய்த ஒரு அழகு பெண்மணிக்கு திடீரேன்று ப்ரேக் போட்டதால் உதடு கிழிந்து, பற்கள் உடைந்து......பாவம் பார்க்கவே பரிதபமாக இருந்தது. இன்னொறு நாள் ஒரு பெரிய BPo நிறுவனத்தின் employee க்கும் இப்படித்தான் நல்ல அடி.. நெற்றியில் தையல் போடப்பட்டது. எதனால் இப்படி நடக்கிறது? employees எல்லாம் அதிகமாக city-ல் தான் வசிக்கிறார்கள். இரவு ஷிஃப்ட் முடிந்து காலையில் செல்லும் பொழுது தூக்க கலக்கத்தில் செல்கிறார்கள். தங்கள் வண்டியின் ஓட்டுனர் மீது அதீத நம்பிக்கை.. ஆனால் ஓட்டுனரோ ஏதோ ஆடு மாடுகளை ஓட்டி செல்வது போல் அத்தனை வேகம். cycle gap-ல் புகுந்து நெளிந்து ஓட்டி செல்கிறார்கள். பெரீய கன்சல்டன்ஸிகள் தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களை பேரூந்துகளில் pick up செய்கிறார்கள். நம்ம பல்லவன் ஊர்தி ஓட்டுநர்கள் எவ்வளவோ தேவலாம். பேரூந்து நிறுத்தத்தில் நிறுத்தி நம் மக்களை ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள். ஆனால் இந்த software கம்பெனி பேரூந்துகளோ நட்ட நடுக்க நிறுத்தி நம்ம இளம் engineer களை ஏற்றி செல்கிறார்கள். எங்கு வேண்டுமானாலும் நிற்கும் இந்த ஊர்திகளுக்கு எழுதாத சட்டம் இது......

"இந்த வண்டி 45 km வேகத்திற்கு மேல் சென்றால் இந்த நம்பருக்கு தொலை பேசுங்கள்" என்றிருக்கும். ஆனால் அந்த நம்பரில் பாதி அழிந்து போயிருக்கும்.

"topnotch techie traveling" என்று சில வண்டிகளில் எழுதியிருக்கும். இந்த வண்டிகள் கொஞ்சம் பொறுமையாக போவதை பார்த்திருக்கிறேன். (ஒரு வேளை அம்பாஸ்ஸடர் கார் என்பதாலோ?)

சென்ற வாரம் ஒரு நாள் எமர்ஜன்சியில் பயங்கர கூட்டம். எல்லாம் 24, 25 வயது தம்பிகள்தான். ஆளுக்கொரு செல் போனை வைத்துக்கொண்டு பதட்டமாக பேசிக்கொண்டிருந்தார்கள். இவங்க ஒரு பெரிய software கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள். தங்களுடன் வேலை பார்க்கும் மூகர்ஜீ இரவு ஒரு மணிக்கு வேலை முடித்துவிட்டு தன் இரண்டு வாகன சக்கிரத்தில் வீடு திரும்பும்போது பீச் ரோடில் ஒரு மின்சார கம்பத்தில் மோதி கீழே விழுந்துவிட்டார்.

உடனே பொது மருத்துவ மனைக்கு கொண்டு போய் அங்கிருந்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்தார்கள். இரத்த சேதம், முகத்திலுள்ள ஒரு எலும்பு விடாமல் fracture. தோல் தேய்ந்து இரத்தம் ....

ICU-ல் admission. மூளைக்குள் இரத்தம் கட்டிவிட்டது. இவர் கூட வேலை செய்பவர்களெல்லாம் வருத்தத்தில்.. மூகர்ஜி ரொம்ப புத்திசாலி என்று சொல்வதை கேட்க முடிந்தது. icu -விற்குள் அனுமதி மறுத்ததால் ஒரே சப்தம்.. .. கோபத்தை வெளிக்காட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பா மூகர்ஜி மதியம் கொல்கட்டாவிலிருந்து வந்தார். மகனுக்கு இவ்வளவு அடிபட்டு இருக்கும் என்று நினைக்கவில்லை போலும்.

முதலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று நினைத்த senior consultant , அப்புறம் medical treatmnet செய்யலாம் என்று முடிவு செய்தார். உடைந்த எலும்புகள் யாவும் wire வைத்து சேர்த்தனர். முகமெல்லாம் தையல்கள். அப்பா மூகர்ஜியை சக ஊழியர்கள் சமாதான படுத்தினார்கள். ஆனாலும் அவர் ஓர் ஓரமாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். முகர்ஜி வேலை செய்யும் நிறுவனம் தன் பணியாளர்களுக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தது. பொருட் செலவு பற்றி கவலை இல்லை. எப்படியும் குணமாக 21 நாட்கள் ஆகிவிடும். 21 நாட்கள் கழித்து வெளியில் வரும்போது இந்த மூளைக்கு எந்த தாக்கமும் இருக்க கூடாது என்று மனதார வேண்டிக்கொண்டேன்.

எனக்கு புரியாதவைகள் சில.

* ஏன் இந்த cab driver கள் இவ்வளவு வேகமாக செல்கிறார்கள்?

* ஏன் நம்ப software employees வீட்டை விட்டு லேட்டாக கிளம்புகிறார்கள்?அதனால் தனே இந்த காரோட்டிகள் இவ்வளவு வேகமாக செல்கிறார்கள்.

* இந்த கம்பெனிகள் தங்கள் contract-ல் இருக்கும் ஓட்டுநர்களுக்கும், வேலை செய்பவர்களுக்கும் traffic rules -m அறிவுரைகளும் சொல்வதில்லையா?

மக்களே!

the country needs your "BRAINS" !!!!!!!!

41 comments:

இலவசக்கொத்தனார் said...

ஒழுங்கா சட்டம் போடணும். அப்புறம் அதை அமுல் படுத்தணும். இங்கதான் இன்னும் தலைக்கவசம் வேணுமா வேண்டாமான்னு தெரியலையே.... என்னிக்குத்தான் நிலமை மாறுமோ தெரியலையே. :(

விஜயன் said...

//software companies-ல் வேலை பார்க்கும் professionals எல்லாம் நிரம்ப புத்திசாலிகள//

நானும் இப்படி நினைத்ததுண்டு!!!


இளவயது, கைநிறைய சம்பளம், வாழ்க்கையை 'சீக்கிரமே'அனுபவிக்க வேண்டும் என்ற துடிப்பு, வேகம்.

அதுவும் சென்னையில் கரணம் தப்பினால் மரணம்.

கால்கட்டு போடும் வரை இப்படித் தான் இருக்குமோ?

Anonymous said...

நம்ம ஊர் போக்குவரத்து ரொம்பவே மோசம்தான். ஆனா இப்ப கொஞ்சம் தேறிட்டு வர்ரமாறி தோணுச்சு. இளவட்டப்புள்ளக கொஞ்சம் அப்படி இப்படி ரூல்ஸ வளைச்சு நெளிச்சு ஓட்டறாங்கன்னு நெனச்சா, தூக்கக்கலக்கத்துல ஓட்டறாங்களா?

Seemachu said...

//ஏன் நம்ப software employees வீட்டை விட்டு லேட்டாக கிளம்புகிறார்கள்?அதனால் தனே இந்த காரோட்டிகள் இவ்வளவு வேகமாக செல்கிறார்கள்.
//
நல்லா எழுதியிருக்கீங்க டாக்டர்.. இந்த அளவு கேள்விகள் கேட்டுக் கொள்ளும் பக்குவம் நம் மக்களுக்கு இருந்தால் எல்லோருக்கும் நல்லது..
அன்புடன்,
சீமாச்சு..

வடுவூர் குமார் said...

the country needs your "BRAINS"
அதெப்படிங்க என் மூளை தருவது?
அவுங்க மூளை என்னவாயிற்று?!! :-))
நமது நாட்டில் உள் கட்டமைப்பு மிகப்பெரிய வளர்ச்சி காணவேண்டும்,இதுவும் பல விபத்துக்கள் நடக்க காரணம்.

அபி அப்பா said...

ஆமாம், இங்கே துபாய்லயும் இதே தொல்லை தான்! ஓட்டுனர்களுக்கு கொஞ்சம் நிதானம் கண்டிப்பா தேவை!

முத்துலெட்சுமி said...

நம் சொந்தக்காரில் இல்லாவிட்டால் அரசுப்பேருந்துல ஆபிஸ் போகறதுல ஆபத்தின் சதவீதம் கம்மி ...இந்த கேப் வண்டியில் போவதைப்போன்ற ஆபத்து வேறெதிலும் இல்லை..இங்கே தில்லியில் கூட அதே கொடுமை தான் ... சாலைகளின் நவீனமும் அதிவேகப்பயணமும் தினமும் ஒரு விபத்தை சந்திக்க வேண்டி வருகிறது.
முதலில் உள்ளே அமர்ந்து பயணிக்கும் இளைஞர்கள் தங்கள் டிரைவர்களை மெதுவாக ஓட்டசொல்லவேண்டும்...அப்படி செய்ய அவர்களின் இளைமையும் பியர் ப்ரெஷரும்விடுவதில்லை போல.

SurveySan said...

Good questions :)

மங்கை said...

டாக்டரம்மா...இந்த ஊர்ல இன்னும் மோசம்...ட்ராஃபிக் ரூல்ஸ்ச மதிக்கவே மாட்டென்னு கங்ககனம் கட்டீட்டு சுத்தராங்க

தருமி said...

எங்க ஊர்ல நான் பார்க்கிற ஒரு கொடுமை: பள்ளி, கல்லூரி பஸ்கள், பள்ளிக் குழந்தைகளை எற்றிச் செல்லும் வண்டிகளின், ஆட்டோக்களின் ட்ரைவர்களை எங்கேயிருந்து பிடித்து வருவார்களோ தெரியவில்லை. அதி வேகம், கண்ட இடத்தில் நிறுத்துவது என்று அவர்களுக்கு என்று ஒரு வழி ..தனி வழி .. அதில்தான் போகிறார்கள். automobile boom என்கிறார்கள்,, இத்தருணத்தில் காவல் துறையும் அரசும் தீவிர வரை முறைகளைக் கையாண்டு நாமெல்லோரும் விதிகளைக் கடைப்பிடிக்க வைக்க வேண்டும். இல்லையெனில் ...


//இலவசக்கொத்தனார் said...
ஒழுங்கா சட்டம் போடணும். அப்புறம் அதை அமுல் படுத்தணும்//

ரிப்பீட்டே .........

TBCD said...

சட்டம் எல்லாம் இல்லீங்க..அந்த கம்பேனி பொறுப்பெடுத்துக்கிட்டா இந்த பிரச்சனை வராது..
அவங்களும் அவுட் சோர்சிங் பண்ணுறாங்க...அத நடத்துறவங்க எல்லாம் அந்த ஏரியால கட்ட பஞ்சாயத்து நடத்துறவங்க..என்ன ஆனாலும் பரவல்ல நான் பாத்துகிறேன்..நீ..இந்த நேரத்துக்குள்ள இத்தனை டிரிப் அடிச்சாகனும் அப்படின்னு சொல்லுவாங்க..வாகன ஓட்டிகளும்..இதனால்...வேக வேகமாக ஓட்டுகிறார்கள்...
என் கார் மீது ஒரு கால் செண்டர் வாகனம் மோதிய அனுபவம் எனக்குண்டு..

மின்னுது மின்னல் said...

சைக்கிளில் சொல்லும் போதுதே தூங்கி விழுந்தவனை பார்த்து இருக்கிங்களா.... :)

siva gnanamji(#18100882083107547329) said...

நல்ல கேள்வி
அதிகாலை நேரங்களில் கேப்களின்
அசுரவேகம் குலைநடுங்கச்செய்கின்றது

delphine said...

ஆகா! கொத்ஸ் வாங்க வாங்க ரொம்ப நாளாச்சு இந்த பக்கம் வந்து...என்ன சொன்னீங்க.. சட்டம்.. அப்படீன்னு ஒண்னு இருக்கா நம்ம ஊர்ல?
தலை கவசம் போடணுமா?
இன்னைக்கு காலயில் நம்ம காவல் துறை, ஆபீஸ் டைமில் நிறைய பேரை பிடித்து வைத்து ஃபைன் வாங்கிகிட்டு இருந்தாங்க..... ஒரே argumnet போலீஸ்காரங்ககூட.. நம்ம தலைய காப்பாற்ற நாம் தான் ஜாக்கிறதையா இருக்கணும்.

delphine said...

விஜயன் நீங்க சொல்றது மாதிரிதான் நிறைய பேர் இருக்கிறார்கள். சென்னையில் வண்டி ஓட்டுவது ஒரு மராத்தான் ரேஸ் மாதிரிதான். போய் சேருவதற்குள்.. அப்பாப்பா..

அதெல்லாம் ஒண்ணும் தேரிட்டு வரல அம்மிணி.. இன்னும் மோசமாத்தான் ஆகுது.

சீமாச்சு ஒரு பத்து நிமிடம் முன்னால் கிளம்பினால் எவ்வளோவோ பிரச்னைகள் சரியாகும்தானே.

குமார் ...உள் கட்டமைப்பு மாத்திரமல்ல, நாம் சரியான முறையில் விதிகளையும் கடைபிடிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

பங்காளி... said...

இங்க எத்தன பேர் கண்ணெதிரில விபத்தையும்,மரணத்தையும் பார்த்திருப்பீங்கன்னு தெரியல...ஆனா நான் குறைஞ்சது ஆறேழு பேர் துடிக்க துடிக்க சாகறத பார்த்திருக்கேன்....

அடுத்தவன் பொறுப்பை பற்றி நீட்டி முழக்கி குறைசொல்லும் முன்னர் நமது கடமையையும் அதை முறையாக செயல்படுத்துகிறோமா என்கிற சுயசோதனையுமிருந்தால் இத்தகைய நிலமை வர வாய்ப்பில்லை என நம்புகிறேன்.

delphine said...

அபி அப்பா... துபாயில் இது மாதிரி software companies இருக்கா என்ன?


அரசுப்பேருந்துல ஆபிஸ் போகறதுல ஆபத்தின் சதவீதம் கம்மி ///
உண்மைதான் முத்துலட்சுமி..ஆனால் தொலை தூர பயணத்திற்கு பஸ் சரிபட்டு வருமா? நீங்கல் சொல்வதுபோல் நம்ம பசங்கள் ஓட்டுநரைவேகமாக போக சொல்லி ஓட்டுகிறார்களோ என்னவோ?

சர்வேசன் முதல்தடவை வ்ற்ரீங்க போலிருக்கு.. இதிலும் ஒரு சர்வே பண்ணிடுவோமா?

delphine said...

வாங்க மங்கை... கங்கணம்.. ஹ்ம்ம். தேவைதானா?


தருமி சார், நீங்க சொல்கிறபடி ஆட்டோ, ஸ்கூல் பஸ் எல்லாம் ஆடு மாடுகளை அடைத்து கொண்டு போவது போல் போகிறார்கள்? மிருகங்களூக்கு கூட blue cross இருக்கு ஆனால் நம்ப ஸ்கூல்ல் பிள்ளைங்கள காப்பாற்ற எந்ந்த cross-ம் இல்லை...இதுவும் நான் அடிக்கடி பார்க்கிறேன்..

delphine said...

என்ன ஆனாலும் பரவல்ல நான் பாத்துகிறேன்..நீ..இந்த நேரத்துக்குள்ள இத்தனை டிரிப் அடிச்சாகனும் அப்படின்னு சொல்லுவாங்க..//

ஆமா ங்க TBCD ... இது ரொம்ப கொடுமையாக தெரியலையா?

ஹல்லொ மின்னல்!
சைக்கிளில் போகும் போது தூக்கமா?

கோபிநாத் said...

அம்மா அருமையான அக்கரையான பதிவு.

ஆனா என்னத்த சொல்றது....

வவ்வால் said...

ஏன் இந்த கேப் ட்ரைவர்கள் வேகமாக செல்கிறார்கள் என்றால் , அவர்களுக்கு டிரிப் கணக்கில் தான் பணம் தறப்படுகிறது. எனவே வேகமாக போய் ஒரு டிரிப் முடித்துவிட்டால் , அடுத்த டிரிப் அடிக்க போகலாம் அல்லவா. இதை விட எல்லா நிறுவனங்களும் ஒரே ஷிப்ட் டைம் வைத்துள்ளதும் காரணம். அதே நேரத்தில் எல்லாரும் போக வேண்டும்.எனவே ஒரு குறிப்பிட்ட சாலையில் அதிகம் போக்குவரத்து ஏற்படும்.

டிரைவர்கள் எல்லாம் ரொம்ப அனுபவம் அற்றவர்கள் ,தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் , சென்னை போக்குவரத்தில் ஒன்னும் புரியாது, போன மாசம் கார் ஓட்ட லைசென்ஸ் எடுத்து இந்த மாசம் வேலைக்கு வந்து இருப்பார்கள்!

Thekkikattan|தெகா said...

Keep up the good spirit, doc!!

சுல்தான் said...

மிகத் தேவையான பதிவு

துபையில் என் சகோதரர் ஓட்டுனராக வேலை பார்க்கும் பல்கலையில்
இரண்டு அல்லது முன்று மாதங்களுக்கு ஒரு முறை எல்லா ஓட்டுனர்களையும் அழைத்து, சாலையில் மக்கள் என்னென்ன தவறு செய்கிறார்கள் அதை எவ்வாறு நாம் தவிர்க்க வேண்டும் என்று சாலை விதிமுறைகளை (அதற்கு தகுதியான நபர்களைக் கொண்டு) சொல்லித் தருகிறார்கள். இதனால் ஓரளவு ஓட்டுனர்கள் தெளிவடைவதோடு விபத்துகளும் குறைவாகிறதாம்.

பெரிய நிறுவனங்களிலாவது இந்த முறை கடைபிடிக்கப்பட்டால் சாலை விபத்துகளை ஓரளவாவது குறைக்கலாம்.

கப்பி பய said...

நல்ல பதிவு! நல்ல கேள்விகள் டாக்டர்!

//ஏன் இந்த cab driver கள் இவ்வளவு வேகமாக செல்கிறார்கள்?
//


1. காரோட்டிகள் ஷிப்ட் முறையில் வேலைக்கு வந்தாலும் பெரும்பாலானோர் தூக்கமில்லாமல் தொடர்ந்து 20 மணி நேரம்கூட வண்டி ஓட்டுகிறார்கள். இதனால் தூக்கமின்மை, கண் எரிச்சல்..'சீக்கிரம் போய் சேர்ந்தால் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்' என்ற எண்ணம்..

2. பெரும்பாலான டிராவல்ஸ் கம்பெனிகளில் காரோட்டிகள் எத்தனை கிலோமீட்டர்கள் ஓட்டுகிறார்களோ அந்தளவுக்கு அவர்களுக்கு சம்பளம். சீக்கிரம் ஒருவரை விட்டுவிட்டு வந்தால் அடுத்த டிரிப் அடிக்கலாம். டிரைவர்கள் வண்டியை வேகமாக விரட்டுவதற்கு இது ஒரு முக்கிய காரணம். அவர்கள் உடனே சீக்கிரம் திரும்ப வந்தால் தான் அடுத்த டிரிப் கிடைக்கும்..காரணம் இரவு நேரமாக ஆக கம்பெனியில் பிக்-அப்பிற்கு ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள்..எல்லோரும் கிளம்பியிருப்பார்கள்..டிரிப் கிடைக்காது...

3. டிராவல்ஸ் கம்பெனியின் சூப்பர்வைசர்கள் டிரைவர்கள் மேல் இரக்கம் காட்டுவதில்லை. ஒரு ஏரியாவிற்கு சென்று வர இத்தனை நேரம் என முன்னமே முடிவு செய்துவிடுவார்கள். போக்குவரத்து நெரிசல் இருந்தாலும் சரி, ஏற்றி வருபவர் லேட் செய்தாலும் சரி..சரியான நேரத்திற்கு சென்றடைய வேண்டும்..இல்லையேல் டிரைவருக்குத்தான் பிரச்சனை.

4. பல சமயங்களில் நீங்கள் சொன்னதுபோல் employees லேட் செய்துவிட்டு டிரைவரை வேகமாகச் செல்லுமாறு சொல்வதும் நடக்கும்.// இந்த கம்பெனிகள் தங்கள் contract-ல் இருக்கும் ஓட்டுநர்களுக்கும், வேலை செய்பவர்களுக்கும் traffic rules -m அறிவுரைகளும் சொல்வதில்லையா?//

கிட்டத்தட்ட எல்லா சாப்ட்வேர் கம்பெனிகளுமே டிராவல்ஸ் கம்பெனிகளுக்கு மொத்தமாக காண்டிராக்ட் கொடுத்துவிடுகிறார்கள்..அந்த டிராவல்ஸ் கம்பெனிகள் இந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை என்பதுதான் உண்மை!!! சாப்ட்வேர் கம்பெனிகள் இந்த விஷயத்தில் அந்தந்த காண்டிராக்டர்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்..ஆனால் இந்த காண்டிராக்ட் விஷயமே தனிக் கூத்து!!
நான் இதுபோல் இரவு லேட்டாக வீட்டிற்குக் கிளம்பினால் எப்.எம் ரேடியோ வைத்துவிட்டு அந்த பாடலைப் பற்றியோ சினிமாவைப் பற்றியோ, சாலை மோசமாக இருப்பதைப் பற்றியோ, டிராபிக் பற்றியோ எதையாவது டிரைவரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே தான் வருவேன்...பின்ன தூக்கத்துல கண் அசந்துட்டாருன்னா ;)

நாகை சிவா said...

இ.கொத்தனார், குமார் கூறுவது தான் என் கருத்தும், கூடவே தனிமனித ஒழுக்கமும், பொறுப்புணர்ச்சியும் வேணும்....

மின்னுது மின்னல் said...

ஹல்லொ மின்னல்!
சைக்கிளில் போகும் போது தூக்கமா?
///

தூக்கமுனு சொல்லலாம் அல்லது கனவு கண்டுகிட்டு போனதாகவும் சொல்லலாம் ஆனா மரத்தில் மோதி சைக்கிள் நிண்டதால அடி பலமா படலை :)

Anonymous said...

தூக்கமில்லாமல்
தமிழ்மணத்தில் கும்மி அடிச்சிஅடிச்சி வழியில் தூங்கியதாகவும் வதந்தி உண்டு

Anonymous said...

அந்த சைக்கிளை கூட அபி அப்பா ஓட்டி பாத்தாரு... :)

delphine said...

சிஜி.. டைடல் பார்க் ரோடில் செல்லும் வாகனக்களாஇ பார்க்கும் போது நிஜமாவே பயம்ம்மா இருக்கூது. எவ்வளவுதான் நாம் ஜாக்கிரதையாக ஓட்டினாலும்..(we always have to do a defensive type of driving
:( )

delphine said...

அடுத்தவன் பொறுப்பை பற்றி நீட்டி முழக்கி குறைசொல்லும் முன்னர் நமது கடமையையும் அதை முறையாக செயல்படுத்துகிறோமா என்கிற சுயசோதனையுமிருந்தால் இத்தகைய நிலமை வர வாய்ப்பில்லை என நம்புகிறேன். ///
சரியாக சொன்னீர்கள் பங்காளி..

delphine said...

கோபி, தெகா thank you...

வவ்வால்... என்ன உங்க profile ரொம்ப suspense ஆ வச்சிருக்கீங்க? ரொம்ப புத்திசாலியான வவ்வால்னு தெரியுது.. கொஞ்சம் உங்க முகத்தை காமிங்கோ!

போன மாசம் கார் ஓட்ட லைசென்ஸ் எடுத்து இந்த மாசம் வேலைக்கு வந்து இருப்பார்கள்//

thank you.. தங்கள் கருத்துக்களுக்கு.

சுல்தான் சார், என் கணவர் கோவையில் traffic DC ஆக இருந்த போது இது மாதிரி நைறைய வகுப்புகள் நடத்தினார். இங்கு அதெல்லாம் நடக்குதா என்று தெரியலை.

துளசி கோபால் said...

தலைப்புக்கான பதில்: இருந்தாக் கொடுக்கமாட்டேனா? வச்சுக்கிட்டா வஞ்சனை செய்யறேன்?


ச்சென்னை ட்ராஃபிக் வயத்துலே புளி(யமரத்தையே) கரைக்கும்.

போக்குவரத்துக்குன்னு தனியா ரூல்ச் இருக்கணும். அது 'அனைவருக்கும்' பொதுவா இருக்கணும்.

ராத்திரி 10 மணிக்கு மேலே ரெட் லைட் இருந்தாலும் போகலாமுன்னு விதி இருக்குன்னு கேப் ட்ரைவர்
சொன்னதுமே நடுங்கிட்டேன்.எல்லாம் நம்ம சிங்காரச்சென்னையில்தான். (ஏர்ப்போர்ட்டில் இறங்கி ஊருக்குள்ளே
வரும்போது)

இலவசக்கொத்தனார் said...

//ராத்திரி 10 மணிக்கு மேலே ரெட் லைட் இருந்தாலும் போகலாமுன்னு விதி இருக்குன்னு கேப் ட்ரைவர்
சொன்னதுமே நடுங்கிட்டேன்.//

டீச்சர்,

இப்படித்தான் ஒரு நாள் நள்ளிரவுக்கு மேல் சிகப்பு விளக்கை கண்டு கொள்ளாமல் சிலர் சென்ற சந்திப்பில் நான் நின்று விட்டேன். போலீஸ் இருப்பதால் நான் நிற்பதாக நினைத்து என் பின் வந்தவர்கள் அனைவரும் நின்று விட்டனர்.

(எங்க சார் போலீஸ் என கேட்டவர்களின் மூலம்தான் காரணம் தெரிந்தது.)

ஆகவே நாம் விதிமுறைகளை மதிக்க வேண்டும். போலீஸும் விதிமுறைகளை அமுல் படுத்த வேண்டும்.

வவ்வால் said...

இ.கொ,
//இப்படித்தான் ஒரு நாள் நள்ளிரவுக்கு மேல் சிகப்பு விளக்கை கண்டு கொள்ளாமல் சிலர் சென்ற சந்திப்பில் நான் நின்று விட்டேன். போலீஸ் இருப்பதால் நான் நிற்பதாக நினைத்து என் பின் வந்தவர்கள் அனைவரும் நின்று விட்டனர்.//

அப்போ அது கண்டிப்பாக சென்னையாக இருக்காது , இங்கே எல்லாம் நள்ளிரவில் சிக்னல்கள் அனைத்தும் மஞ்சள் விளக்கில் சிமிட்டி எரியும் வண்ணம் செய்துவிடுவார்கள் , சிக்னல் எல்லாம் வேலை செய்யாது!

பழூர் கார்த்தி said...

good article...

These points are valid ->

// டிராவல்ஸ் கம்பெனியின் சூப்பர்வைசர்கள் டிரைவர்கள் மேல் இரக்கம் காட்டுவதில்லை. ஒரு ஏரியாவிற்கு சென்று வர இத்தனை நேரம் என முன்னமே முடிவு செய்துவிடுவார்கள். போக்குவரத்து நெரிசல் இருந்தாலும் சரி, ஏற்றி வருபவர் லேட் செய்தாலும் சரி..சரியான நேரத்திற்கு சென்றடைய வேண்டும்..இல்லையேல் டிரைவருக்குத்தான் பிரச்சனை.

4. பல சமயங்களில் நீங்கள் சொன்னதுபோல் employees லேட் செய்துவிட்டு டிரைவரை வேகமாகச் செல்லுமாறு சொல்வதும் நடக்கும். //

delphine said...

கப்பி தம்பி.. இப்படி சொல்ல பிடிக்குது... அது என்ன கப்பி பய..நீங்கள் சொல்லும் காரணங்கள் முழுக்க சரியானவைத்தான். ஆனால் பாவம் நம்ப பிள்ளைங்க ..

Thank you Siva..

delphine said...

மின்னல் , அப்படீன்னா நீங்கத்டதான் கும்மி அடிப்பவரா? அடடா தெரியாமா போச்சே!

நன்றி கார்த்தி.

வவ்ஸ்... உங்க முகத்தை கொஞ்சம் காமிங்களேன். ப்ளீஸ்.

delphine said...

தலைப்புக்கான பதில்: இருந்தாக் கொடுக்கமாட்டேனா? வச்சுக்கிட்டா வஞ்சனை செய்யறேன்? ???///

துளசி.....கிண்டல்தானே வேண்டாங்கிறது. உங்களுக்கு இல்லன்னா எனக்கும் இல்லதான்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அக்கா!
இந்தப் போக்குப் பற்றி வேறு பத்திரிகைகளிலும் படித்த ஞாபகம். வேகமாக வேலையில் இருங்கள். பயணங்களில் வேண்டாம்.

மிகுந்த சிரத்தையும், அக்கறையும் உள்ள பதிவு.

இலவசக்கொத்தனார் said...

//அப்போ அது கண்டிப்பாக சென்னையாக இருக்காது , இங்கே எல்லாம் நள்ளிரவில் சிக்னல்கள் அனைத்தும் மஞ்சள் விளக்கில் சிமிட்டி எரியும் வண்ணம் செய்துவிடுவார்கள் , சிக்னல் எல்லாம் வேலை செய்யாது!//

ஆமாம் வவ்வால். இது பெண்களூரு, ச்சீ பெங்களூரு. அதுவும் ரொம்ப வருடங்களுக்கு முன்னாடி.

இன்னும் ஒருவர் அப்பொழுது தந்த இலவச அறிவுரை - சார், இந்த மாதிரி எல்லாம் சிகப்பு விளக்கிற்காக நிற்காதீர்கள், பின்னாடி வரும் லாரி பஸ்காரர்கள் இடித்துவிடுவார்கள். சிகப்பு விளக்கில் நிற்பார்கள் என அவர்கள் எதிர் பார்க்க மாட்டார்கள்!!

என்னத்த சொல்ல!! :(

கப்பி பய said...

//கப்பி தம்பி.. இப்படி சொல்ல பிடிக்குது... அது என்ன கப்பி பய..//

உங்களுக்கு எப்படி விருப்பமோ அப்படி கூப்பிடுங்க :)))//ஆனால் பாவம் நம்ப பிள்ளைங்க ..//

அண்மையில் வந்த ஒரு குறுஞ்செய்தி ஜோக்:

ஒரு சாப்ட்வேர் கம்பெனி வாசலில் உள்ள வாசகம்: காரோட்டிகளே வேகமாக காரை ஓட்டி எங்கள் பணியாளர்களை கொல்ல வேண்டாம்..அந்த வேலையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் :)))

நீங்க சொன்ன மாதிரி ரொம்ப பாவம் தான் :))))